puzhal lake alert | புழல் ஏரி நீர்வரத்து
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 3வது முறையாக ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பியது. இன்று காலை 6மணி நிலவரப்படி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2954 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.71 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1115கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது புழல் ஏரி 90% நீர் இருப்பை நெருங்கிய நிலையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 3வது முறையாக மீண்டும் 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியின் 2 ஷட்டர்களை திறந்து 200 கன அடி தண்ணீரை திறந்துள்ளனர். புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
