chess Championship 2026 | 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப்
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இதுவரை திவ்யா தேஷ்முக மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் பெற்றிருந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி மூன்றாவதாக தகுதி பெற்றுள்ளார்.உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றதன் மூலம், மூன்றாவது இந்தியராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் சேர்ந்த டன் ஜோங்யியை எதிர்கொண்டார். 11 சுற்று முடிவில் 8 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆனார். இதன் மூலம் இந்த பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். வைசாலி. இவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அக்கா ஆவார். இவரது தந்தை ரமேஷ்பாபு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது தாயார் நாகலட்சுமி.வைசாலி, 2012-ல் 12 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளையோர் சதுரங்க போட்டி, 2015 இல் 14 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளை வென்றார். 2013 ஆம் ஆண்டில், தனது 12-ஆவது வயதில் உலக சதுரங்க போட்டியாளரான மாக்னசு கார்ல்சனைத் தனது சொந்த ஊரான சென்னையில் இருந்தபோது நடந்த ஒரு போட்டியில் தோற்கடித்தார். 2016 இல், வைசாலி பெண் பன்னாட்டு மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். அக்டோபர் 2016 இல், இவர் இந்தியாவில் 16-வயதுக்குட்பட்டோரில் இரண்டாவது இடத்தையும், உலகின் 12-ஆவது இடத்தையும் அடைந்தார். அந்த நேரத்தில், அவர் 2300 என்ற எலோ மதிப்பீட்டைக் கொண்டிருந்தார். 2018 ஆகஸ்ட் 12 அன்று லாத்வியா, ரீகா நகரில் நடந்த ரீகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக திறந்த சதுரங்கப் போட்டியில் தனது இறுதி வெற்றியை பெற்றதன் மூலம் அவர் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். வைசாலி 2020 இணைய-வழி ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தார். இப்போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. 2021-இல் வைசாலி தனது பன்னாட்டு மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். 2022-இல், 8-ஆவது பிசர் நினைவுப் பதக்கத்தை வென்றார். இப்போட்டியில் 7.09 மதிப்பெண்களைப் பெற்றார். 2022 பிடே மகளிர் வேக-சதுரங்க வாகையில் பங்கேற்க வைசாலி அழைக்கப்பட்டார். இங்கு பெண்கள் உலக மின்-சதுரங்க போட்டியாளரான பிபிசராவை 16-ஆவது சுற்றிலும், காலிறுதியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லியையும் தோற்கடித்தார்.வைசாலி 2023 டாட்டா ஸ்டீல் சதுரங்க சுற்றுப்போட்டியில் விளையாடி, 4.5/14 மதிப்பெண்கள் பெற்றார், அத்துடன் இரண்டு 2600 மதிப்பிடப்பட்ட கிராண்ட் மாஸ்டர்களான லூயி பாலோ சுபி, செர்குசு பெச்சாக் ஆகியோரை வீழ்த்தினார். மொத்தத்தில் இவர் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்தார்.2023 கத்தார் திறந்த மாசுடர்சு சுற்றை வைசாலி 5/9 மற்றும் 2609 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் முடித்த பிறகு தனது இறுதி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். அத்துடன் பெண்களுக்கான சிறந்த பரிசையும் வென்றார். மாண் தீவில் நடைபெற்ற 2023 பிடே மகளிர் கிராண்ட் சுவிசு சுற்றில் வைசாலி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் 8.5/11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார், இதன் மூலம் 2024 இல் கனடாவின் டொராண்டோவில் நடைபெறவிருக்கும் பெண்கள் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றார். போட்டியின் முடிவில் அவரது நேரடி மதிப்பீடு கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான 2500 புள்ளிகளை விட 3 புள்ளிகள் குறைவாக இருந்தது, ஆனால் அவரது அடுத்த சுற்றில் முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற பிறகு அவர் 2501 ஐ எட்டினார், இதனால் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும், பெண்களில் 11-ஆவது இடத்தையும் பெற்றார். இவரும் அவரது இளைய சகோதரர் ர. பிரக்ஞானந்தாவும் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் உடன்பிறப்புகள் ஆவர்.
