cm stalin speech | முக ஸ்டாலின் பேச்சு
மதுரை திருமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
இதில் ஓ.பி.எஸ்-ஐ வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லேட்டாக வந்தாலும், எம்.ஜி.ஆர். இருந்த தாய்க்கழகமான தி.மு.க.வுக்கே ஓ.பி.எஸ் திரும்பியுள்ளார். இந்த மேடையில் இருப்போம் என அவரே சில காலத்திற்கு முன்பு வரை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று முதல்வர் குறிப்பிட்டார். மேலும், எம்.ஜி.ஆருக்கு நீங்க மட்டும் ரசிகன் அல்ல, நானும் ரசிகன்தான். தி.மு.க எம்.ஜி.ஆரை வளர்த்தது, எம்.ஜி.ஆர் தி.மு.கவை வளர்த்தார். கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்.ஜி. ஆர். அண்ணா தொடங்கிய இயக்கத்திற்கு உரிமைக் குரல் எழுப்பி நீங்க வந்துள்ளீர்கள் என வரவேற்றார்.
ஓ.பி.எஸ்-ஸின் குணநலன்கள் குறித்துப் பேசிய முதல்வர், ஓ.பி.எஸ் எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார்; அதுவே அவரின் பண்பு. ஆனால், சட்டமன்றத்தில் என்னை பார்த்து அவர் சிரித்ததையே ஏதோ போர் வந்ததுபோல பெரிய பிரச்னையாக்கிவிட்டார்கள். அமைதியும் புன்னகையும் மட்டுமல்ல, ஓ.பி.எஸ் என்றால் அது விசுவாசம்தான். அதனால்தான் ஜெயலலிதா தனது இருக்கையில் அவரை 2 முறை அமர வைத்தார் என்றார். எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடிய முதல்வர், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தையே பா.ஜ.க விடம் எடப்பாடி அடமானம் வைத்துள்ளார். பா.ஜ.க தனக்கு நல்லது செய்யும் என அவர் எதிர்பார்க்கிறார், ஆனால் பா.ஜ.க யாருக்கும் நல்லது செய்யாது. அ.தி.மு.க.வின் ரத்தத்தை பா.ஜ.க உறிஞ்சுகிறது. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதிதான் எடப்பாடிக்கும் ஏற்படும் என எச்சரித்தார். மேலும், தேர்தல் வரைதான் எடப்பாடி பொதுச்செயலாளராக நீடிப்பார்; அதன்பின் அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு வேண்டிய ஒருவரை அமர வைக்க பா.ஜ.க திட்டம் போட்டுள்ளது. இதனால்தான் அதிமுக கூட்டணி என்று சொல்லாமல் என்.டி.ஏ. கூட்டணி என அவர்கள் கூறுகிறார்கள் என்றார்.
