Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்
Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்
சிறப்பு வாய்ந்த சூரசம்ஹாரம்
கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நடைபெறும் முதல் சூரசம்ஹாரம்
“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” அறுபடை வீட்டின் நாயகனான முருக பெருமான் அருள்கிடைத்தால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி என பல கோடி பக்தர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல்வேறு இடங்களில் கோயில்களும், அந்த கோயில்களுக்கு என்று தனிக்கதை இருந்தாலும் முருக பெருமான் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமி மலை, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகியவை ஆகும்.
சூரபத்மன், இடும்பன் போன்ற அரக்கர்களை முருக பெருமான் வதம் செய்து அழித்து நிகழ்வாக ஆண்டு தோறும் சூரசம்ஹாரம் முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. சூரனை அழித்த முருக பெருமானிடம் விரதம் இருந்து மனமுருகி வேண்டினால் எதுவாக இருந்தாலும் முருக பெருமான் வழங்குவான் என்பதால் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வரும் சஷ்டி தினத்தில் விரதம் இருந்து தங்களுடைய வேண்டுதல்களை முருக பெருமானிடம் பக்தர்கள் மனமுருகி வேண்டுவார்கள். 6 நாட்கள் முழுவதும் விரதம் இருந்து 7 ஆவது நாளான சூரசம்ஹார தினத்தில் விரதத்தை நிறைவு செய்யும் வகையிலும், 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு நாள் விரதமாக சூரசம்ஹார தினத்தில் விரதம் இருந்து முருக பெருமானிடம் மனமுருகி வேண்டும் பக்தர்களும் உள்ளனர்.
அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றாலும் அசுரனை வதம் செய்த திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு அனைத்து முருக பக்தர்களிடம் பிரசித்தி பெற்றுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியின்போது திருச்செந்தூரில் குவிந்து முருக பெருமானை தரிசனம் செய்து வருவார்கள்.
ஆண்டு தோறும் சூரசம்ஹாரம் நடைபெற்றாலும் இந்த ஆண்டு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து நடைபெறும் முதல் சூரசம்ஹாரம் என்பதால் பக்தர்களிடையே இந்த சூரசம்ஹாரம் பிரசத்தி பெற்றுள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம், கலசங்கள், நாளி கிணறு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் தங்குவதற்கான புதிய அறைகள், தலைவாசல் கோபுரம் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ள திருச்செந்தூரில் அக்டோபர் 27 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் முடிந்து நடைபெறும் முதல் சூரசம்ஹாரம் என்பதால் பல லட்சம் மக்கள் வருவார்கள் என்ற நிலையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்து சமய அறிநிலையத்துறையும், தமிழக அரசும் செய்து வருகிறது. சூரசம்ஹாரத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
