chitfund fraud arrest | சிட்பண்டு நிறுவனத்தில் மோசடி
அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்டு நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் உள்ள அச்சலிஸ் சிட்பண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் ரூ.2.17 லட்சம் செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும் மேற்படி டில்லிபாபு உட்பட சுமார் 70 பொதுமக்களிடம் பணம் ரூ.2.4 கோடிக்கு மேல் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு, சிட்பண்டு நிறுவனத்தின் இயக்குநர்களான யுவராஜ், ஆனந்தன் மற்றும் இந்நிறுவனத்தில் கணக்கு மேலாளராக வேலை செய்து வந்த வினோத்குமார் ஆகியோர் சிட்பண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு மேற்படி டில்லிபாபு மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இப்புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி ஆ.ராதிகா, இ.கா.ப அர்களின் வழிகாட்டுதலின் பேரில், துணை ஆணையாளர் திரு.S.செல்வராஜ், இ.கா.ப, அவர்களின் அறிவுரையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி புலனாய்வுப்பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் எதிரிகள், புகார்தாரர் உட்பட சுமார் 70க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து சீட்டு பணத்தை வசூல் செய்து, சீட்டு முடிந்த பிறகும் ரூபாய்.2.4 கோடி பணத்தை திருப்பி தருவதாக கூறி காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தேடுதலில் ஈடுபட்டு இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆனந்தன் என்பவரை கோயம்புத்தூரில் வைத்தும், நிறுவனத்தின் கணக்கு மேலாளர் வினோத்குமார் என்பவரை சென்னையில் வைத்தும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் எழும்பூர், CCB & CBCID நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
