ADMK EPS Condemns | எதிர்க்கட்சித் தலைவர் சாடல்
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று தமிழகத்தில் அந்த வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று சுமார் ரூ.6100 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதல்வர் ரூ.1342 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ரூ.15516 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்த முதல்வரின் சுற்றுப்பயணம் மூலமாக தமிழக இளைஞர்கள் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 2022 ஆம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 55 விழுக்காடு முதலீடுகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் ரூ.22958 கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக திமுக அரசு கூறி வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை, மாறாக தங்களுடைய தொழிலை வெளிநாட்டில் விரிவுபடுத்துவதற்காகவும், குடும்பத்துடன் வெளிநாடு பயணம் செய்வதற்காக மட்டுமே முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது சுமார் 1 கோடி 30 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவித்து வருவதாகவும், வேலைவாய்ப்பு இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இளைஞர்கள் போதை பழக்கம் அடிமையாகும் சூழ்நிலையும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் பக்கம் திரும்பும் நிலை இருந்து வருவதாகவும், தமிழகத்திற்காக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும் முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்ததாக மட்டுமே தகவல்கள் உள்ளதாகவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறும் காகிதத்தில் ஒப்பந்தமாக மட்டுமே இருக்கும் எனவும் இந்த ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு எந்த முதலீடும் வரவில்லை எனவும், எவ்வளவு பணம் முதலீடாக கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக தமிழக அரசும், திமுக முதல்வரும் தெரிவிப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
