TN Alcohol misuse | அஞ்சும் தமிழக காவல்துறை
பொதுவாக திமுக ஆட்சி காலங்களில் காவல் துறையில் செயல்பாடு சற்று மந்தமாகவும், அதிமுக ஆட்சி காலங்களில் காவல்துறையின் செயல்பாடு அதிரடியாகவும் இருக்கும் என்பது ஒரு மரபாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் காவல் துறையின் செயல்பாடு அதிரடியாகவே இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மந்தமாக தொடங்கிய காவல் துறையின் செயல்பாடு தற்போது முழுவதும் மந்த நிலையில் உள்ளது. காவல்துறை அதனுடைய காக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தாலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரை அனைவரும் விமர்ச்சிக்கின்றனர். இதற்கு தமிழகத்தில்,கஞ்சா தொடங்கி மெத்தமட்டமைன், அபீன் உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததே காரணமாக சொல்லப்படுகிறது. என்னதான் காவல் துறையினர் இரவு பகல் பார்க்காமல் பணியை மேற்கொண்டாலும் போதை ஆசாமிகளை கண்டு அஞ்சும் நிலை தற்போது சென்னை காவல்துறையிலேயே உள்ளது. டாஸ்மாக் கடைக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு, போதை பார்ட்டி நடத்தி கைதான நடிகர்கள், ஆங்காங்கே நடத்தப்படும் போதை பார்ட்டிகள் உள்ளிட்ட சம்பவங்கள் சென்னையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக காவலர்களுக்கு எதிராக சென்னையில் அரங்கேறிய சம்பவங்கள் போதை ஆசாமிகளை கண்டு அஞ்சும் நிலையில் காவல்துறை இருப்பதை காண்பித்துள்ளது. சென்னை புளியந்தோப்பில் செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்க சென்ற காவலர்களை தகாத வார்த்தையில் பேசிய போதை ஆசாமிகள், சென்னை நொளம்பூர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள், சென்னை பூந்தமல்லியில் போக்குவரத்து காவலரை தாக்கிய வடமாநில ஓட்டுநர் என அடுத்தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மீது போதை ஆசாமிகள் நடத்தும் தாக்குதல்களால் என்ன செய்வதென தெரியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர்.சம்பவம் நடக்கும்போது அதனை எதிர்கொள்ளும் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை இருக்கிறது. பிறகு, சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் பின்னர் போதை ஆசாமிகளின் மீது காவல்துறை எடுக்கும் நிலை உள்ளது.பொதுவாக ரவுடிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதிரடி இருக்கும். ஆனால் தற்போது ரவுடிகளின் செயல்பாடுகள் குறைவாக இருந்தாலும் போதை ஆசாமிகளின் அட்ராசிட்டி அதிகரித்துள்ளதால் போதை ஆசாமிகளை எப்படி கையாள்வது என்பதில் போலீசாருக்கு குழப்பம் உள்ளது. போதை பொருள் பயன்படுத்துபவர்களின் உடல் நிலை மோசமான நிலையில் இருக்கும்போது அவர்கள் மீது ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுத்தால் விபரீத விளைவுகளே காவல்துறையினருக்கு திரும்புகிறது. சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை துன்புறுத்தினால் ரவுடிகளின் பாணியிலேயே அவர்களுக்கு பாடம் புகட்டப்படும் என சென்னை ஆணையர் அருண் தெரிவித்து இருந்தார். ரவுடிகளின் கண்காணிப்பிலும், அவர்களை கையாள்வதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டாலும் போதை ஆசாமிகளை கையாள்வதில் பெரும் குழப்பத்திலேயே சென்னை காவல் துறை இருந்து வருகிறது.போதை பொருட்கள் விற்பனை தடுப்பு, பல கைது நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டாலும், போதை பொருட்களால் அழிந்து வரும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், காவலர்களின் கலக்கத்தை போக்கும் வகையிலும் போதை பயன்பாட்டை தடுக்க காவல் துறை தீவிரம் காட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
