Tenkasi oldlady suffers | கனமழையால் இடிந்த சுவர்
வடகிழக்கு பருவமழையால் வீட்டை இழந்த மூதாட்டி தவெக மாவட்ட செயலாளர் நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது .இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சில இடங்களில் வீடுகளும் சேதமடைந்தது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வி கே புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு மூதாட்டியின் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
வி கே புதூர், கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதரவற்ற மூதாட்டி சரஸ்வதி, வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், பரவலாக பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை மற்றும் சுற்றுசுவர் ஈரப்பதத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இடிந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த மூதாட்டி உயிர் தப்பியுள்ளார்.
மேலும் மூதாட்டி வீட்டை இழந்து தவித்து வந்த நிலையில் இது பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்தது. இதனைத் தொடர்ந்து தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் JAS.ராஜ பிரகாஷ் சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவை பார்த்து உடனடியாக அந்த மூதாட்டிக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணத்துடன் மூதாட்டியை நேரில் சென்று பார்த்து மூதாட்டிக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 வழங்கியது மட்டுமல்லாமல் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் வீட்டை இழந்த மூதாட்டியை நேரில் பார்க்காமல் அந்த மூதாட்டிக்கு எந்த உதவியும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், தாமாக முன்வந்து மூதாட்டியை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் பணமும் ,மளிகை பொருட்களும் வழங்கிய தவெக மாவட்ட செயலாளரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
