TN Assembly Election | 2026 சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஆளுங்கட்சியான திமுக, கரூரில் முப்பெரும் விழா மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே தனது சுற்று பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது பிரச்சார பயணங்களை துவக்கியுள்ளனர். கடந்த ஆண்டு புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் சினிமா நிகழ்ச்சிகளைபோல வார இறுதி நாட்களில் பிரச்சார சுற்று பயணம் மேற்கொள்கிறார். கட்சிகளின் செயல்பாடு ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது பணிகளை துவக்கி தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் 2026 இல் நடைபெறும் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. மேலும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டபணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்களை வாக்குசாவடி அலுவலர்களாக பயன்படுத்தி கொள்ளவும் அனுமதியளித்துள்ளது.இந்த தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இருப்பதால் தற்போதைய சூழலில் திமுக கூட்டணியே பலம் வாய்ந்த கூட்டணியாக பார்க்கப்படுகிறது. சிதறி கிடக்கும் அதிமுக, கூட்டணி இணைப்பிலேயே கவனம் செலுத்தும் பாஜக, யாருடன் கூட்டணி செல்லலாம் என திட்டமிடும் பாமக, எப்போதும் போல தன்னிச்சையாக களமிறங்கும் நாம் தமிழர் கட்சி, இவற்றோடு சினிமா கவர்ச்சியோடு வந்துள்ள நடிகர் விஜயின் தவெக என பலமுனை போட்டி காத்திருக்கிறது. இவர்களில், தங்களுக்கு தேவையானதை செய்பவர்களை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டிய பொறுப்பு தமிழக மக்கள் மீது சுமையாக விழ வாய்ப்புள்ளது.
