nallakannu passed away | மறைந்தார் போராளி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சமூக விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணு உடல் நலக்குறைவால் காலமானார்.
தோழர் இரா. நல்லகண்ணு கட்சியில் உறுப்பினராக சேரும் பொழுது கட்சிக்கு வயது 17.
15 வயதிலேயே நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த நேரம்… தன் வயதொத்த இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ கவிதையை பாடிக்கொண்டே செல்வாராம்.
நல்லகண்ணு 1943ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் . நாங்குநேரி, களக்காடு பகுதிகளில் கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டார். நெருக்கடியான தலைமறைவு வாழ்க்கையில் விவசாய சங்கத்தில் பணிபுரிந்தார். எண்ணற்ற போராட்டங்கள் . 1946 ஆம் ஆண்டு ஜனசக்தியின் பணி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தேச விடுதலைக்குப் பின் திரும்பி வந்து கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார்.
1948ஆ ம் ஆண்டு 109 தோழர்கள் மீது போடப்பட்டது. நல்லகண்ணுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஏழாண்டாக குறைக்கப்பட்டது.
விடுதலைக்குப் பின்பு 1958ஆம் ஆண்டு பேராசிரியர் நா. வானமாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது. மருதன்வாழ்வு அன்னாசாமியின் மூத்த மகள் ரஞ்சிதத்தை கரம்பிடித்தார். இரண்டு பெண் குழந்தைகள்.
எளிமை, அன்பு, தீர்க்கமான பார்வை, 100 வயதை கடந்த நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக இருக்கிறார்
. தோழர் நல்லகண்ணு பொது வாழ்வுக்கு எடுத்துக்காட்டு… நம்மோடு வாழ்ந்து மறைந்த மகத்தான தலைவருக்கு ஆழ்ந்த இரங்கலை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
