Election commission warns | தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
பா.ம.க.வில் நிறுவனர் இராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரித்துவிட்டது என்று அன்புமணி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அன்புமணி இராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி இராமதாஸை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீது விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று விசாரணை வந்தது. இந்த விவகாரத்தில் சின்னம் ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
