srilanka emergency declared | அவசரநிலை பிரகடனம்
இலங்கையில், டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்துள்ளார்.
இலங்கையில், வரலாறு காணாத கனமழை பெய்ய காரணமான டிட்வா புயல் இன்று (நவ. 29) காலை அந்நாட்டின் எல்லையைக் கடந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உடனடியாக “அவசரநிலை” அறிவிக்க வேண்டுமென அதிபர் அநுர குமார திசநாயகவிடம் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அவசரநிலைச் சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், மருத்துவப் பணியாளர்களும் களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் சேதமாகி பாதைகள் முடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
