Anesthesia in Tamilnadu | மயக்க மருந்தில் அதிர்ச்சி
உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இந்த மயக்க மருந்தை எந்த சிகிச்சையின் போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஏனெனில் சிலருக்கு முழு மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், சிலருக்கு அரை மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்,
மயக்க மருந்து பயன்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மயக்க மருந்து பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்தும் தேவை குறித்தும், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரும், மயக்கவியல் நிபுணருமான டாக்டர் மீனாட்சி சுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
மயக்க மருத்துவத் துறை பல்வேறு பிரிவுகளில் வீறு நடை போட்டு வியக்கத்தகு முன்னேற்றங்களை விஞ்ஞான ரீதியாகப் பெற்று வருகிறது.
அந்த வகையில் முழு மயக்கம் செலுத்துதல், தண்டுவடத்திற்கு அருகில் மயக்க மருந்து கொடுத்து இடுப்புப் பகுதிக்கு கீழ் செயலிழக்கச் செய்தல், தேவைப்படும் இடங்களில் தண்டுவட நரம்புகளை செயல் இழக்கச் செய்தல், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வரும் நரம்புகளை– எடுத்துக்காட்டாக கை,கால் போன்ற பகுதிகளுக்கு வரும் நரம்புத் தொகுப்புகளை செயலிழக்கச் செய்தல் என்ற வகையில் வளர்ந்து வந்த மயக்க மருத்துவம் தற்பொழுது பிரமிக்க வைக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பைப் தந்துள்ளது.
அது என்னவெனில், நோயாளிகளின் வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கோளாறுகளைக் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் கருவிகளைப் பயன்படுத்தி , அறுவை சிகிச்சை நோயாளிகளின் குறிப்பிட்ட நரம்புகளை மயக்க மருத்துவர்கள் செயலிழக்கச் செய்து,வலி நீக்கம் செய்து வருகிறார்கள்.அல்ட்ரா சவுண்டு கருவிகளில், தேவைப்படும் அதிர்வெண்களைக் கொண்ட தூண்டி(PROBE)இணைப்புகளைப் பயன்படுத்தி இது செயல் படுத்தப்படுகிறது.இது எவ்வாறு நடைபெறுகிறது எனில், எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறதோ அந்த இடத்திற்கு வருகிற ஓரிரண்டு நரம்புகளை மட்டும் மயக்க மருத்துவர் செயல் இழக்கச் செய்வார்.
கர்ப்பிணி ஆகுமுன் மற்றும் கர்ப்ப காலத்தில் நடத்தப்படும் பரிசோதனைகள்(பாலினத் தேர்வைத் தடை)சட்டம்(PCPNDT Act) என்பதன் மூலம் கதிரியக்க மருத்துவர்கள் அல்லது மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே அல்ட்ரா சவுண்டு கருவிகளை வாங்குவதற்கு உரிமம் பெற்றவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பாலினத்தைக் கண்டறியும் தவறான முறைகளைத் தடுப்பதற்காக அல்ட்ரா சவுண்டு கருவிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இணை இயக்குனரின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் நரம்புகளை செயலிழக்கச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய அல்ட்ரா சவுண்ட் கருவிகளை மயக்க மருத்துவர்கள் எளிதில் பயன்படுத்தப்பட முடியாத சூழ்நிலை தற்பொழுது நிலவுகிறது. எனவே இந்த பயிற்சியைப் பெற்ற மயக்க மருத்துவர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு உரிமம் வழங்குதற்கும் அல்லது உரிமம் பெறுவதில் இருந்து விலக்களிப்பதற்கும், மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பதற்கும் அரசு இயந்திரம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கையினை இந்திய மயக்க மருத்துவர் சங்கத்தினர்கள் விரும்புகிறார்கள்.
மனித வாழ்விற்கு மருத்துவம் எவ்வளவு முக்கியமோ? அந்த மருத்துவத்திற்கு மயக்க மருத்தும் மிகவும் முக்கியம். இந்த மயக்க மருத்து அரசு துறை மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? அல்லது வியாபார ரீதியில் பணத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா? என தமிழ்நாடு சுகாதார துறை கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
