Pak officer waved TN | வேவு பார்த்த பாகிஸ்தான்
தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் முக்கிய திருப்பமாக, தமிழக சிறப்பு நீதிமன்றம் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னாள் துணை தூதர் அமீர் சுபைல் சித்திக் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அக்டோபர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் உளவு செயல்பாடுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணை, நாடு முழுவதும் பரவியிருந்த ஒரு பெரிய சதி திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.இது தொடர்பாக முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிம் அன்சாரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த ஜாகிர் உசேன், சிவபாலன் மற்றும் ரபிக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த அருண் செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. NIA மேற்கொண்ட தீவிர விசாரணையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், புனித தோமையர் மலை ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை துறைமுகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம், மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது.இந்த சதி முயற்சியின் பின்னணியில், அமீர் சுபைல் சித்திக் என்பவர் முக்கிய நபராக செயல்பட்டதாக NIA தெரிவித்துள்ளது. இவர் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றியவர். அவருடன் பணியாற்றிய இன்னொரு இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்த சதியில் உடந்தையாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த தகவல்கள் கசிந்தவுடன், பாகிஸ்தான் அரசு, அமீர் சுபைல் சித்திக் மற்றும் மற்ற அதிகாரிகளை இலங்கை தூதரகத்திலிருந்து தமது நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்கு தற்போது பூந்தமல்லியில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விசாரணையில், அமீர் சுபைல் சித்திக் அக்டோபர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.வழக்குடன் தொடர்புடைய விரிவான அறிக்கையை, தேசிய புலனாய்வு முகமை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
