Brain Eating Amoeba | மூளையை தின்னும் அமீபா
நேக்லிரிய பௌலிரி எனும் அமீபா (ஒரு செல் உயிரினத்தின் வகை) வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவையாகும். உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமீபா என அழைக்கிறோம். இதுபோன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது. அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும் நிலை உள்ளது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொதுவாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைவானவர்களே இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இறந்துவிடுகின்றனர் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் தெரிவிக்கிறது. இந்த நோய் தற்போது இந்தியாவில் கேரளாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர்.பொதுவாகத் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்துக்கு வழிவகுக்கிறது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கூறுகிறது. உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படும் எனவும், இந்த தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது எனவும், பாதிக்கப்பட்ட நபர் இறந்தபிறகே, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் சூழல் உள்ளது எனவும் அமெரிக்க மையம் கூறுகிறது.இந்த அபூர்வ வகையான நோய் தற்போது இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 18 பேர் இந்த நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபாவால் கேரளாவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து இந்த நோயை தடுக்கும் நடவடிக்கையில் கேரள அரசு இறங்கியுள்ளது. மேலும் இந்த நோயில் இருந்து எவ்வாறு காத்து கொள்ளுவது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் கேரள அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, “அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸை எதிர்த்துப் போராட கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம். மேலும் நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த நோய்க்கு எதிராக நாம் வலுவான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டும் நீர்நிலைகள் உட்பட, தேங்கி நிற்கும் அல்லது மாசுபட்ட நீரில் நம் முகத்தை கழுவவோ அல்லது குளிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கிணறுகள் அறிவியல் ரீதியாக குளோரினேட் செய்யப்பட வேண்டும். நீர் பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்களும் முறையாக குளோரினேட் செய்யப்பட வேண்டும். பராமரிப்பு தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். வீடுகளில் உள்ள நீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த வகை அமீபா உங்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறது. எனவே தண்ணீர் உங்கள் மூக்கில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.கேரளாவில் தொடர்ந்து இந்த நோய் தாக்குதல்கள் அதிகரிக்கும் வரும் சூழ்நிலையில் நோய் பரவலை தடுக்க அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.
கேரளா எல்லையுடன் அதிகளவில் இணையும் மாநிலமாக இருக்கும் தமிழகத்திற்கு இந்த நோய் பரவல் ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதா? இதுவரை தமிழகத்தில் இந்த நோய் பாதிப்பு உள்ளதா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் நோய் பாதிக்கப்பட்டவர் இறந்த பின்பே இந்த நோய் தாக்குதலால் இறந்தார் என்பதை கண்டறியும் சூழலில் மூளை தின்னும் அமீபா நோய்க்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
