CM MK Stalin about students
ஒரு ஃப்ரண்டா இருங்க – முக ஸ்டாலின்
மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, முடிவுற்ற பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” எப்போதும் மாணவர்களுக்குத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். ஆனால், வரவேற்புரை மூலமாக ஆசிரியருக்கே பாடம் எடுத்திருக்கிறார் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். என்னைப் பொறுத்தவரை, முதலமைச்சர் என்பதால், சில ஆலோசனைகளை உங்களிடம் சொல்கிறேன். ஆசிரியர் என்பவர், பாடப்புத்தகத்தில் இருக்கின்ற பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பவர் அல்ல; தன்னுடைய கல்வியையும், அனுபவத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, எதிர்காலத்தில், நல்லொழுக்கம் மிக்க நாளைய சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் வகுப்பறைக்குள்ளே நுழையும்போதும், நினைவில் கொள்ள வேண்டியது – உங்கள் முன்னால் உட்கார்ந்திருப்பவர்கள், பாடம் கற்றுக் கொள்கின்ற மாணவர்கள் மட்டுமல்ல, எதிர்கால டாக்டர்கள், இன்ஜினியர்கள், சயிண்டிஸ்ட், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்ற அரசியல் தலைவர்கள் என்று நீங்கள் உணரவேண்டும்.
நாட்டின் எதிர்காலத் தூண்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்ற பொறுப்புணர்வு தான் உங்களிடம் மேலோங்கி இருக்கவேண்டும்! இத்தனை ஆண்டு காலமாக, நீங்கள் மாணவர்களாக இருந்து, கல்வியைக் கற்று, சமூகத்தை உள்வாங்கி பெற்றிருக்கக்கூடிய அனுபவத்தை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கடத்தி, இந்தச் சமூகத்துக்கே ஒளியேற்றி வைக்கப் போகிறீர்கள்! இன்றைக்கு நாம் இருக்கின்ற காலக்கட்டத்தில், பாடம் எடுப்பது உங்களுக்கு எளிதாகிவிடும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், நீங்கள் படித்த காலத்தில், ஏன், நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் பரந்துபட்ட வாசிப்பிற்கான தேடலுக்கு மிகவும் மெனக்கெட வேண்டியதாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அப்படியல்ல! அறிவியல், வரலாறு, கணிதம் தொடங்கி, எந்தப் பாடமாக இருந்தாலும், அதன் ஆழத்தை, ரொம்ப எளிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவிட்டது! ஆனால், இதில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இவைகள் அனைத்துமே தகவல்கள்தான்
இந்தத் தகவல்களை மாணவர்களின் அறிவாற்றலுக்குக் கொண்டு சென்று அவர்களுடைய சிந்தனையைத் தூண்டி, அவர்களுடைய அறிவை மேம்படுத்த வேண்டிய பெரும் பணி உங்களிடம் தான் இருக்கிறது. ஏனென்றால், எந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக்கிடக்கிறதோ, அதற்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் தேவையற்ற குப்பைகளும் இருக்கிறது. அதற்காக நாம் தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்ல முடியாது. நாம்தான் நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மாணவர்களுக்கு சரியானதை அடையாளம் காட்டவேண்டும்! எதற்கெடுத்தாலும் டெக்னாலஜியை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக நம்முடைய மாணவர்கள் மாறிவிடக் கூடாது. எதுவாக இருந்தாலும், கூகுளிடம் கேட்டுக் கொள்ளலாம். ஏ.ஐ.-யிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக் கூடாது என கூறினார்.
